மராட்டியத்தில் போக்குவரத்து விதி மீறல் அபராதம் அதிகரிப்பு
மராட்டிய மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய அரசு 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை சமீபத்தில் பிறப்பித்தது. இதன்படி போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத்தை அதிகரிக்கும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில போக்குவரத்து கமிஷனர் அவினாஷ் தகானே கூறுகையில், "இது ஒட்டுமொத்த சாலை பாதுகாப்பை மேம்படுத்தும். சாலை விபத்தில் பலி எண்ணிக்கையை குறைத்து, மக்கள் இடையே சாலை ஒழுக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். அதே நேரத்தில் 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்துடன் ஒப்பிடுகையில் பல விதி மீறல்களுக்கு அபராதத்தை மாநில அரசு குறைத்து அமல்படுத்தி உள்ளதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
உதாரணமாக 2019-ம் ஆண்டு சட்டத்தின்படி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அது ரூ.1,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பல விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.500-யில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்தால் ரூ.200 ஆக இருந்த அபராதம் ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நோ பார்க்கிங் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், அதிக ஹாரன் சத்தம் எழுப்பினால் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், பெர்மிட் இல்லாவிட்டால் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், அதிவேகத்துக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் அபராத தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.
இதில் 2-வது முறை ஒருவர் அதிவேகமாக வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும். மேலும் சரியான நம்பர் பிளேட், பின்புற விளக்கு (tail lammp), பிரதிபலிப்பான் (reflectors) இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூ.1,000, 2-வது முறை ரூ.1,500 அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வாகன ஓட்டிகள் வழக்கமாக மீறும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது (ரூ.500), சீட் பெல்ட் அணியாமல் இருத்தல் (ரூ.200) ஆகிய விதிமீறல்களுக்கான அபராத தொகை உயர்த்தப்படவில்லை. உயர்த்தப்பட்டு உள்ள அபராத தொகையை உதவி இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், போக்குவரத்து பிரிவு இல்லாத மாவட்டங்களில் போலீஸ் ஏட்டு ஆகியோர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே வசூலிக்க அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story