நாகலாந்து துப்பாக்கிச்சூடு; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதளம் முடக்கம்


நாகலாந்து துப்பாக்கிச்சூடு; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதளம் முடக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2021 3:27 PM IST (Updated: 5 Dec 2021 3:27 PM IST)
t-max-icont-min-icon

நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

கோஹிமா,

நாகலாந்து மாநிலம் மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோன் மாவட்டதில் ஒடிங் என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று மாலை வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்த போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர்  கொல்லப்பட்டதாக பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிகிறது. இதனால், தற்பாதுகாப்புக்காகவும் பாதுகாப்பு படையினர் சுட்டதாக சில உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நாகலாந்து முதல் மந்திரி நைபியு ரியோ, மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த சம்பவத்தை கேள்வி பட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு  உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இணையதள சேவைகளை நாகலாந்து அரசு தடை செய்துள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாகலாந்தில் கொன்யாக் இனத்தினரால் கொண்டாடப்படும் கலாச்சார பண்டிகை கொண்டாட்டங்கள் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story