குஜராத் கலவரத்தில் மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Dec 2021 4:02 AM IST (Updated: 10 Dec 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் கலவரத்தில் மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி கோத்ரா பகுதியில் ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. கலவரத்தை தூண்டியதாகவும், அதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்போது முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. கலவரம் தொடர்பான வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக எவ்வித உறுதியான ஆதாரங்களும் இல்லை எனக் கூறி சிறப்பு விசாரணைக்குழு நரேந்திர மோடி உள்ளிட்ட 64 பேரை கடந்த 2012-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவித்தது.

இதை எதிர்த்து குஜராத் கலவரத்தில் உயிரிழந்த ஜாப்ரி என்பவரின் மனைவி ஜாகியா ஜாப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜரானார். சிறப்பு விசாரணைக்குழு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜரானார். வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளி வைத்தது.

Next Story