மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது: மத்திய மந்திரி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Dec 2021 1:47 PM IST (Updated: 10 Dec 2021 1:47 PM IST)
t-max-icont-min-icon

ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டுசெல்லும் உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.

ஸ்ரீஹரிகோட்டா,

இஸ்ரோவால் மேற்கொள்ளப்படும் ககன்யான் திட்டமானது பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டுசெல்லும் திட்டமாகும். 

ககன்யான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது  அறிவித்தார்.

ககன்யானின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டுவருவந்து இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும்.

இந்த பணிக்காக  நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டனர். பெங்களூருவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. சில உபகரணங்களை வழங்குவதற்காக ரஷ்யா மற்றும் பிரான்ஸ் விண்வெளி நிறுவனங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து விண்வெளி உடைகள், விண்வெளி வீரர்கள் இருக்கைகள் போன்றவை கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தொழில்நுட்ப மந்திரி ஜிதேந்திர சிங் கூறுகையில், "ககன்யான் எனப் பெயரிடப்பட்ட, இந்திய மண்ணில் இருந்து ஏவப்படும் முதல் மனித விண்வெளிப் பயணமானது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 2022 இல் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த திட்டம் தாமதமானது. தற்போது 2023-ல் இலக்கை அடைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒரு வெற்றிகரமான ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டுசெல்லும் உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்." இவ்வாறு  அவர் கூறினார்.

ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.


Next Story