கைக்குழந்தையுடன் இருந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்


கைக்குழந்தையுடன் இருந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்
x
தினத்தந்தி 10 Dec 2021 3:35 PM IST (Updated: 10 Dec 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

கைக்குழந்தையுடன் இருந்த நபரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டிஹெட் மாவட்டம் அக்பர்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் லத்தியால் கண்மூடித்தனமாக தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபரின் சகோதரர் அந்த மருத்துவமனை ஊழியராவார். அவர், மருத்துவமனை நடவடிக்கைகளில் தொந்தரவு செய்ததால் அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்துள்ளனர். அப்போது, தனது சகோதரனை கைது செய்ய வேண்டாம் என கூறி அந்த நபர் தனது குழந்தையை தோளில் சுமந்தபடி போலீசாரை தடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த போலீசார் கைக்குழந்தையை தோளில் சுமந்தபடி இருந்த அந்த நபரை லத்தியால் கடுமையாக தாக்கினார். போலீசார் தன்னை தாக்கும் போது ’குழந்தைக்கு காயம் ஏற்பட்டுவிடும் இது எனது குழந்தை... குழந்தைக்கு தாய் கிடையாது’ என்று கூறிக்கொண்டே நின்றுள்ளார். போலீசார் அவரை தொடர்ந்து தாக்கினர். பின்னர் குழந்தையை அந்த நபரிடம் இருந்து வாங்க முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தனது குழந்தையை தனது தோளில் இருந்து இறக்கவில்லை. இறுதியில் அந்த நபரை குழந்தையுடன் போலீசார் வாகனத்தில் ஏற்றினர்.

கைக்குழந்தையை தோளில் சுமந்தபடி இருந்த நபரை போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நபரை தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 



Next Story