புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி பயணம்.!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Dec 2021 12:58 AM IST (Updated: 12 Dec 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

பதவியேற்ற பின் முதல் முறையாக முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி செல்கிறார். பிரதமர், மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற ஓரிரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனால் அவரால் டெல்லி செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் புதுவை மாநில மேல்சபை எம்.பி. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு பா.ஜ.க. தலைமையிடம், முதல்-அமைச்சர் ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தது. ஆனால் அவர் டெல்லி செல்லவில்லை.

இதற்கிடையே கடந்த மாதம் திருப்பதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்னிந்திய முதல்-மந்திரிகள் மாநாட்டில், முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த புதுவைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும், மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அமித்ஷா, முதல்-அமைச்சர் ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ரங்கசாமி டெல்லி செல்கிறார். அவருடன் அமைச்சர் லட்சுமி நாராயணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் செல்கின்றனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அப்போது புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும், கடன் தள்ளுபடி, பஞ்சாலைகளை நவீனப்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த சில அரசு அதிகாரிகள் தடையாக இருக்கின்றனர். அவர்கள் குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story