சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Dec 2021 3:51 PM IST (Updated: 14 Dec 2021 3:51 PM IST)
t-max-icont-min-icon

சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான 2 அவசர சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்தது. இந்த சூழலில் அவற்றுக்கு மாற்றாக நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 2 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக ஆகஸ்ட் மாதம் மழைக்கால கூட்டத்தொடரின் போது "கட்டுப்பாடில்லாமல்" நடந்துகொண்டதற்காக குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர்.

மக்களவை மற்றும் மாநிலங்களைவையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அறையில் கூடி, நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடருக்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். 

Next Story