கொரோனாவால் கணவரை இழந்த பெண்களின் சொத்துரிமை, வாரிசு உரிமையை பாதுகாக்க திட்டம் - மந்திரி யஷோமதி தாக்கூர் தகவல்
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் கணவரை இழந்த பெண்களின் சொத்துரிமை, வாரிசு உரிமையை பாதுகாக்க புதிய திட்டத்தை உருவாக்கி இருப்பதாக மந்திரி யஷோமதி தாக்கூர் தெரிவித்தார்.
மும்பை,
கொரோனா காரணமாக குடும்பத்தில் முக்கிய உறுப்பினர்களை இழந்து தடுமாறும் குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்ட மராட்டிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனாவால் கணவரை இழந்த பெண்களின் மறுவாழ்வு மற்றும் வாரிசு உரிமைகளை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பணியை மராட்டிய அரசு மாவட்ட பணிக்குழுவிடம் வழங்கி உள்ளது.
இந்த திட்டம் குறித்து மராட்டிய மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி யஷோமதி தாக்கூர் கூறியதாவது:-
“கொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு சொத்து மற்றும் வாரிசு உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. எனவே சில மாதங்களுக்கு முன்பு அரசால் தொடக்கப்பட்ட “மிஷன் வாத்சல்யா” திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் குழு, கணவரை இழந்த பெண்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் சொத்து மற்றும் வாரிசு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை சரிபார்ப்பதோடு, அவர்கள் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகிறார்களா என்பது குறித்தும் அறிந்துகொள்வார்கள்.
பணி குழு அதிகாரிகள் மாதாந்திர அறிக்கையை மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட பணிக்குழுவிடம் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் இதுபோன்ற வழக்குகள் அனைத்தையும் கண்காணித்து மறுஆய்வு செய்து பெண்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வார்கள். கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா காரணமாக 16,627 பெண்கள் தங்கள் கணவர்களை இழந்துள்ளனர். அவர்களில் 16,516 பேரின் பட்டியல் மாவட்ட பணிக்குழுவிடம் உள்ளது.”
இவ்வாறு மந்திரி யஷோமதி தாக்கூர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story