பெலகாவியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: கர்நாடக முதல்-மந்திரி
பெலகாவியில் சங்கொள்ளி ராயண்ணா சிலையை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தார்வார் மாவட்டம் உப்பள்ளி விமான நிலையத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கீழ்த்தரமான செயல்
பெலகாவியில் சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை உடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும். சிலர் தங்களது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதற்காக, இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறாா்கள்.
இந்த கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி அரசுக்கு தெரியும். பெலகாவியில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சமூக விரோதிகள் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாரையும் விடப்போவதில்லை.
யாரும் தப்பிக்க முடியாது
சுதந்திரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை உடைத்தவர்கள், இந்த நாட்டின் உண்மையான தேச பக்தர்களாக இருக்க முடியாது. வன்முறை சம்பவம் தொடர்பாக பெலகாவி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கவும், தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவாா்கள்.
ஏற்கனவே சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகளுடன், மந்திரி அரக ஞானேந்திரா தொடர்பில் இருந்து வருகிறார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
பதிலளிக்க மறுப்பு
இந்த நிலையில், பெலகாவியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால், கர்நாடகத்தில் எம்.இ.எஸ். அமைப்பு தடை செய்யப்படுமா ? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதுபற்றி எந்த பதிலும் தெரிவிக்க பசவராஜ் பொம்மை மறுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
Related Tags :
Next Story