டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரிப்பு..!
தலைநகர் டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 430 ஆக பதிவாகி உள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில், தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.இந்த நிலையில், டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 430 ஆக பதிவாகி இருப்பதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காற்று தரக் குறியீடு, டெல்லியை ஒட்டிய புறநகர் பகுதிகளான குருகிராமில் 375 ஆகவும் நொய்டாவில் 570 ஆகவும் பதிவாகி உள்ளது.
காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள்.
அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது, 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது, 401 முதல் 500 வரை இருந்தால் மிகக் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.
100க்குள் இருக்க வேண்டிய காற்று தரக் குறியீடு அளவு, தொடர்ந்து 400க்கும் மேல் பதிவாகி வருவதால் தலைநகரில் வசிக்கும் மக்கள், பொதுமுடக்கம் அமலில் இருப்பது போல வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Related Tags :
Next Story