பீகார்: பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு - ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில், இன்று காலை 10 மணியளவில் அங்கு உள்ள பாய்லர் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல் உறுப்புகள் வெடித்து சிதறியதால், அவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பாய்லர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாய்லர் வெடித்த சத்தம் மிகவும் வலுவாக இருந்ததால், வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அது கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story