இந்தியாவின் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது - சோனியா காந்தி
நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை வலுவிழக்கச் செய்ய வெறுக்கத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சோனியா காந்தி கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சி தொண்டர்களுக்கு காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அதில், அவர் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சோனியா காந்தி பேசியதாவது, நாட்டில் சாதாரண குடிமக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும், பயத்திலும் உள்ளனர். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை மீறி நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வெற்றி தோல்விகள் தவிர்க்கமுடியாதவை. ஆனால், பன்முகத்தன்மை கொண்ட நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்கான நமது அர்ப்பணிப்பு இறுதி வரை நீடிக்கக்கூடியது.
நமது சுதந்திர போராட்டத்தில் எந்த வித பங்களிப்பையும் அளிக்காத வெறுப்புணர்வு மற்றும் பிளவு சித்தாந்தங்களை கொண்ட சக்திகள் தற்போது நமது மதச்சார்பற்ற சமூகத்தில் அழிவை ஏற்படுத்துகின்றன.
வரலாற்றை மாற்றி எழுதி தங்களுக்கு தகுதியில்லாத பங்குகளை அவர்களே பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டி, பயத்தை உண்டாக்கி, பகைமையை பரப்புகின்றனர். இந்தியாவின் பாரம்பரியத்தை வலுவிழக்கச் செய்ய வெறுக்கத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது. தேச விரோத சக்திகள், சமூக விரோத சதிகளுக்கு எதிராக போராட காங்கிரஸ் அனைத்தையும் செய்யும்’ என்றார்.
Related Tags :
Next Story