கொரோனா மின்னல் வேகம் எதிரொலி: மும்பையில் 144 தடை உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 Dec 2021 3:52 AM IST (Updated: 31 Dec 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

கொரோனா பாதிப்பு மின்னல் வேகம் காரணமாக மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எகிறும் கொரோனா:

மராட்டியத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக மின்னல் வேகமெடுத்து உள்ளது.

கொரோனா தினசரி பாதிப்பு 1000-க்கு கீழ் இருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 2 ஆயிரத்து 172 பேரும், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 900 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல தலைநகர் மும்பையில் மட்டும் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 510 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட கொரோனா பாதிப்பு நாள்தோறும் 2 மடங்கு அதிகரித்து வருகிறது.

மும்பையில் 144 தடை

இந்தநிலையில் மாநில தலைநகர் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் சைதன்யா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே திறந்தவெளி, உள்அரங்குகள், ஓட்டல்கள், உணவகங்கள், மண்டபங்கள், பார்கள், பப், ரெசார்ட், கிளப்கள், மொட்டை மாடி பகுதி என எந்த பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற கூடாது.

144 தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. ஜனவரி 7-ந் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது உள்ள கட்டுப்பாடுகளின் கீழ் ரெயில், பஸ், தனியார் கார்கள் இயக்கப்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மராட்டியம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story