ககன்யான் முதல் ஆளில்லா விண்கலம் ; சுதந்திர தினத்திற்கு முன் அனுப்ப இஸ்ரோ திட்டம்


ககன்யான் முதல் ஆளில்லா விண்கலம் ; சுதந்திர தினத்திற்கு முன் அனுப்ப இஸ்ரோ திட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2022 7:13 AM GMT (Updated: 2022-01-04T13:05:28+05:30)

ககன்யான் திட்டத்தின்படி முதல் ஆளில்லா விண்கலத்தை, இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவிற்கு(ஆகஸ்ட் 15, 2022) முன்னதாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார்.

ககன்யானின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் திரும்ப கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும். ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டுசெல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளன. 

ககன்யான் திட்டத்தின்படி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக 2 முறை ஆளில்லா விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருப்பதாவது;-

“இந்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கின்றன. பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களான EOS-02, EOS-4, EOS-6 ஆகியவற்றை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சோதனை செய்யப்பட்ட உள்ளது. 

இவை தவிர சந்திரயான்-03, ஆதித்தா, XpoSat, IRNSS மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்நுட்ப செயல்விளக்க பணிகள் ஆகியவை உள்ளன. சந்திரயான்-03 திட்டத்தை அடுத்த ஆண்டு மத்தியில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின்படி முதல் ஆளில்லா விண்கலத்தை, இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவிற்கு(ஆகஸ்ட் 15, 2022) முன்னதாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த இலக்கை எங்களால் அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story