ஆந்திராவில் சம்பள உயர்வை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் பிரமாண்ட பேரணி..!
ஆந்திர அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
விஜயவாடா,
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலின் போது மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதியளித்தார். இதனால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்தனர்.
இந்த சூழலில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதாக நள்ளிரவில் அரசாணையை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். அதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை. அதற்கு பதிலாக பிட்மெண்ட் 23 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த பயனுமில்லை என்று பரவலாக கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்கள் இன்று ‘சலோ விஜயவாடா’ என்ற மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர்.
சலோ விஜயவாடா போராட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொள்வதை தடுக்க, நகரின் புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
போராட்டக்காரர்களை கைது செய்ய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் சிறப்பு போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இருந்தபோதும் லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பேரணியில் பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது. அந்த பேரணியில் முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ஆந்திர அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story