மக்களவையில் இந்தியில் பதில்; சசி தரூர்-ஜோதிராதித்ய சிந்தியா இடையே விவாதம்
தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய துணைக் கேள்விக்கு பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய துணைக் கேள்விக்கு பாஜக எம்.பி.யும், மத்திய சிவில் விமான போக்குவரத்துறை மந்திரியுமான ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்து பேசினார். அவரிடம் தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் அவர் பதிலளிக்கும் போது இந்தியில் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியும், அவர் இந்தியில் பேசுவது தமிழக எம்.பி.க்களை அவமதிக்கும் செயல்” என்றார். ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவரான ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டு பாஜகவில் சேர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் முன்வைத்த குற்றச்சாட்டை சற்றும் எதிர்பார்க்காதவராக, “நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பேசுவது விநோதமாக இருக்கிறது'' என்றார்.
உடனே குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “இதில் எந்த அவமதிப்பும் இல்லை” என பிரச்சினையை முடித்து வைத்தார். நேற்று முன்தினம், மக்களவையில் ராகுல் காந்தி, “தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு அவையில் மதிப்பில்லை” என குற்றம் சாட்டியிருந்த நிலையில், நேற்று மீண்டும் தமிழக எம்.பி.க்கள் குறித்து அவையில் பேச்சு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story