இந்திராணி முகர்ஜியாவின் ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்திராணி முகர்ஜியாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியாவின் மனைவி இந்திராணி முகர்ஜியா. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் முகர்ஜியாவுக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா முறைதவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷ்யாம்வர் ராய் ஆகியோரும், பிறகு பீட்டர் முகர்ஜியாவும் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்திராணி முகர்ஜியாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்திராணி முகர்ஜியாவின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, மனுதாரருக்கு எதிரான வழக்கு விசாரணை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கடந்த ஆறரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 185 சாட்சிகளை விசாரிக்க வேண்டியிருப்பதாலும், சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாலும் இந்த வழக்கு விசாரணை மேலும் 10 ஆண்டுகள் வரை நடைபெறும். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்திராணி முகர்ஜியாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story