'தானே- திவா' புதிய ரெயில் தடங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
தானே- திவா இடையே ரூ.620 கோடி செலவில் அமைக்கப்பட்ட 5, 6-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ரூ.620 கோடியில் ரெயில் பாதை
மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினந்தோறும் 80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தினமும் சுமார் 45 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். மத்திய ரெயில்வே வழித்தடத்தில் குர்லா- தானே, திவா- கல்யாண் இடையே 6 வழிப்பாதைகள் உள்ளன. எனவே 4 பாதைகளில் மின்சார ரெயில்களும், 2 பாதைகளில் எக்ஸ்பிரஸ், நீண்ட தூர ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால் திவா- தானே இடையே 4 வழிப்பாதைகள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக விரைவு மின்சார ரெயில்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஒரே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.
எனவே இதை தடுக்கும் வகையில் ரூ.620 கோடி செலவில் தானே - திவா இடையே 5, 6-வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணி கடந்த 8-ந்தேதி முடிந்தது. இந்த திட்டத்தில் 170 மீட்டர் நீளத்துக்கு 2 சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 6 பிளாட்பாரம், 8 நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டன. 1.4 கி.மீ. நீள ரெயில்வே மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்களும் கட்டப்பட்டு உள்ளன.
மோடி திறந்து வைத்தார்
இந்தநிலையில் தானே- திவா இடையே அமைக்கப்பட்ட 5, 6-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் 2 புதிய ரெயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு மும்பையின் பங்களிப்பு முக்கியமானதாகும். தற்போது தற்சார்பு இந்தியாவை உருவாக்க மும்பையை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல 21-ம் நூற்றாண்டில் மும்பையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். தானே- திவா புதிய வழித்தடங்கள் மும்ைப மக்களின் வாழக்கையை எளிதாக்கும். நிற்காத நகரின் வேகத்தை அதிகரிக்கும். புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதி ஏற்று உள்ளது. தானே- திவா இடையே 5, 6-வது வழிப்பாதையை அமைக்க 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அது 2015-ல் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதில் சில சவால்கள் ஏற்பட்டன. எல்லா தடைகளையும் தாண்டி இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புல்லட் ரெயில் திட்டம்
எங்களது அரசு ரெயில்வேயை பாதுகாப்பானதாகவும், நவீனமானதாகவும் மாற்ற உறுதி ஏற்று உள்ளது. திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதலில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் உள்கட்டமைப்பு திட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டது. நாங்கள் எங்களது அணுகுமுறையை மாற்றி உள்ளோம். 5, 6-வது வழிப்பாதை மூலம் மும்பையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படாது. லட்சிய திட்டம் (புல்லட் ரெயில் திட்டம்) தற்போது அவசியமாகும். அது உள்கட்டமைப்பை மேம்படுத்தி, 'கனவுகளின் நகரம்' என மும்பையை அடையாளப்படுத்தும். மும்பை - ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தை முடிக்க அனைவரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் காணொலி காட்சி மூலம் கவர்னர் பகங்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோரும் கலந்து கொண்டனர். தானே ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இணை மந்திரி ராவ்சாகிப் தான்வே, மாநில மந்திரிகள் ஏக்னாத் ஷிண்டே, ஜித்தேந்திர அவாத், கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இணை மந்திரி ராவ்சாகேப் தான்வேவுடன் மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டார்.
Related Tags :
Next Story