5 மாநில சட்டசபை தேர்தல்: ரூ.1000 கோடிக்கு மேல் பணம்-பரிசு பொருள் பறிமுதல்..!
5 மாநிலங்களில் நடந்து வரும் சட்டசபை தேர்தலையொட்டி இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் பணம் - பரிசு பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலையொட்டி தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு பணம்- பரிசு பொருள் வினியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை முடுக்கிவிட்டு உள்ளது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.1,000 கோடி மதிப்புள்ள பணம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தேர்தல் கமிஷன் அறிக்கையின்படி, அதிகபட்சமாக மொத்தம் ரூ.510.91 கோடி பறிமுதல் செய்யப்பட்டு பட்டியலில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் - ரூ.307.92 கோடி, மணிப்பூர் -ரூ. 167.83 கோடி, உத்தரகாண்ட் - ரூ.18.81 கோடி, கோவா -ரூ.12.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஐந்து மாநிலங்களில் மொத்த பறிமுதல் ரூ.1,018 கோடிக்கு மேலாகும். இந்த மாநிலங்களில் 2017 சட்டமன்றத் தேர்தல்களின்போது கைப்பற்றப்பட்ட மதிப்பான ரூ.299.84 கோடியை விட இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும்.
ஐந்து மாநிலங்களில் மொத்தம் ரூ.140.29 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் ரூ.99.84 கோடி மதிப்புள்ள 82 லட்சம் லிட்டர் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.569.52 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.115.054 கோடி மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள், ரூ.93.5 கோடி மதிப்புள்ள இலவசப் பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தரபிரதேசத்தில் 7-ம் கட்ட தேர்தல் நடைபெறும் மார்ச் 7-ந் தேதியுடன் 5 மாநில தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story