உக்ரைனில் சிக்கியுள்ள மீதமுள்ள கர்நாடக மாணவர்களையும் மீட்க நடவடிக்கை - பசவராஜ் பொம்மை பேட்டி


உக்ரைனில் சிக்கியுள்ள மீதமுள்ள கர்நாடக மாணவர்களையும் மீட்க நடவடிக்கை - பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2022 12:58 AM IST (Updated: 28 Feb 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கியுள்ள மீதமுள்ள கர்நாடக மாணவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படை எடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இதுவரை சுமார் 800 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் கர்நாடக மாணவர்கள் 30 பேர் அடங்குவர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுவரை 30 கர்நாடக மாணவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். டெல்லி மற்றும் மும்பைக்கு வரும் மாணவர்கள் அங்கிருந்து கர்நாடகம் அழைத்து வரப்படுகிறார்கள். கர்நாடக பேரிடர் நிர்வாக ஆணையம் மூலமே மாணவர்களின் போக்குவரத்து செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உக்ரைனில் இன்னும் சிக்கியுள்ள கர்நாடக மாணவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு துறையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். உக்ரைனின் கார்கிவ் நகரில் கர்நாடக மாணவர்கள் நிறைய பேர் சிக்கியுள்ளனர். அவர்களுடன் அரசு பேசியது. அங்கு தான் போர் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அங்குள்ள மெட்ரோ, பதுங்கு குழிகளில் மக்களை தங்க வைத்துள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது. அங்கு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறையை கேட்டுள்ளோம். போரின் தீவிரம் குறையும் வரை அங்குள்ள மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அத்துடன் அவர்களை தாயகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாகவும் வெளியுறவுத்துறை உறுதி அளித்துள்ளது. கர்நாடக அதிகாரிகள் மத்திய அரசின் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story