அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி மந்திரி நவாப் மாலிக் மனு - மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி கைதான மந்திரி நவாப் மாலிக் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மும்பை,
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக், கடந்த மாதம் 23-ந் தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் அமலாக்கத்துறை காவலில் உள்ளார்.
இந்த நிலையில் தன் மீதான வழக்கு, அமலாக்கத்துறை காவலை ரத்து செய்யக்கோரி மந்திரி நவாப் மாலிக் வக்கீல் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், “மனுதாரரின் கைது சட்டவிரோதமானது. மத்திய முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை விமர்சித்ததால் அவர் குறிவைக்கப்பட்டுள்ளார். மனுதாரரின் அரசியல் எதிரிகள், அவர் அம்பலப்படுத்திய விஷயங்களால் அவமானத்தில் உள்ளனர்.
எனவே மனுதாரரை முடக்க அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கை சட்டவிரோதமானது, வெட்ககேடானது. எந்த வித சம்மன் அல்லது நோட்டீசும் வழங்காமல் அமலாக்கத்துறை மனுதாரரை வீட்டில் இருந்து வலுகட்டாயமாக அழைத்து சென்று உள்ளது” என கூறப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் எஸ்.பி. சுக்ரே, ஜி.ஏ.சனாப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடக்கிறது.
Related Tags :
Next Story