உக்ரைன் விவகாரம்: ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சு
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், போதிய போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நகர்களிலேயே சிக்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் சிக்கி ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒரு இந்திய மாணவர் உக்ரைனில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலை குறிப்பாக இந்திய மாணவர்கள் அதிக அளவில் சிக்கியுள்ள கார்கீவ் நகரின் நிலவரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். சண்டை நடைபெற்று வரும் பகுதியில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்று குறித்து பிரதமர் மோடியும், அதிபர் புதினும் ஆலோசித்தனர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது இது 3-வது முறையாகும்.
Related Tags :
Next Story