“ஆபரேஷன் கங்கா” : 8-ந் தேதிக்குள் உக்ரைனில் இருந்து 6,300 இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் - மத்திய அரசு
உக்ரைனில் இருந்து 8-ந் தேதிக்குள் 31 மீட்பு விமானங்கள் மூலம் 6 ஆயிரத்து 300 இந்தியர்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி,
உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ‘ஆபரேஷன் கங்கா’ என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்துவரப்படுகின்றனர். கடந்த 26-ந் தேதியில் இருந்து 9 மீட்பு விமானங்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்டு அழைத்துவரப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,377 இந்தியர்களுடன் 6 மீட்பு விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டதாக நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தநிலையில், இனிவரும் நாட்களுக்கான மீட்பு திட்டத்தை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று தொடங்கி, 8-ந் தேதி வரை மொத்தம் 31 மீட்பு விமானங்கள் இயக்கப்படும்.
அவற்றின் மூலம் 6 ஆயிரத்து 300 இந்தியர்கள் அழைத்துவரப்படுவார்கள். இண்டிகோ நிறுவனம் 12 விமானங்களையும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை தலா 7 விமானங்களையும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 4 விமானங்களையும் இயக்குகின்றன. இந்திய விமானப்படை விமானம் ஒன்றும் இயக்கப்படுகிறது.
இவற்றில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 21 விமானங்களும், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து 4 விமானங்களும், போலந்து நாட்டின் ரெஸ்சோவில் இருந்து 4 விமானங்களும், சுலோவாகியா நாட்டின் கோசிஸ் நகரில் இருந்து ஒரு விமானமும் இயக்கப்படும்.
இந்திய விமானப்படை விமானம், புகாரெஸ்டில் இருந்து இயக்கப்பட உள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் தலா 180 பேரும், ஏர் இந்தியா விமானத்தில் 250 பேரும், இண்டிகோ விமானத்தில் 216 பேரும் பயணம் செய்யலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story