புனே மெட்ரோ ரெயில் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்


புனே மெட்ரோ ரெயில் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 6 March 2022 2:38 AM GMT (Updated: 6 March 2022 2:38 AM GMT)

புனே மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

புனே,

மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புனே வருகிறார். அவர் காலை 11 மணியளவில் புனே மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைக்கிறார். 9.5 அடி நீளம் கொண்ட இந்த சிலை 1,850 கிலோ உலோகத்தால் செய்யப்பட்டது ஆகும்.

பின்னர் காலை 11.30 மணிக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கர்வாரே மெட்ரோ ரெயில் நிலையத்தை திறந்து வைக்கும் அவர், அந்த ரெயில் நிலையத்தை ஆய்வு செய்கிறார். பின்னர் அவர் அங்கு இருந்து ஆனந்த்நகர் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்.

மதியம் பிரதமர் மோடி புனேயில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் ரூ.1,080 கோடி செலவில் முலா-முத்தா நதியை சுத்தப்படுத்தும் திட்டம், புதிய 100 இ-பஸ் சேவைகளை தொடங்கி வைக்கும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி புனேயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story