மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை! - தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை! - தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா
x
தினத்தந்தி 10 March 2022 8:30 AM IST (Updated: 10 March 2022 8:30 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத் தன்மையுடனேயே செயல்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

முன்னதாக, நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அம்மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டை சுமத்தினார். இதனால் வாரணாசியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடத்த வாய்ப்பில்லை என்பதை விளக்கினார். இந்த சம்பவம் குறித்தும் தெளிவுபடுத்தினர். 

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத் தன்மையுடனேயே செயல்படுகிறது.  வாரணாசியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வாரணாசி கூடுதல் தேர்தல் அதிகாரி உட்பட 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

வாரணாசியில் வெளியில் எடுத்து செல்லப்பட்டவை பயிற்சிக்காக கொண்டு வரப்பட்ட எந்திரங்களாகும். வாக்குப்பதிவின் போது, ஏதேனும் குளறுபடி ஏற்படும் பட்சத்தில் மாற்று எந்திரங்களாக உபயோகப்படுத்திட கூடுதலாக சில எந்திரங்கள் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அந்த எந்திரங்களே கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இதுகுறித்த  முறையான தகவலை அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். 

ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்திலும் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த எண்ணை கட்சிக்காரர்களிடம் காட்டி விளக்கிய பின்னர் அவர்கள் திருப்தியடைந்தனர்.

2004ம் ஆண்டு முதல் வாக்கு எந்திரங்கள் தேர்தல் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டு முதல் விவிபேட் எனப்படும் வாக்காளர் வாக்கு செலுத்தியதை சரிபார்ப்பதற்கான வசதி கொண்டுவரப்பட்டது. வாக்கு எந்திரத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் வரும் போது இந்த விவிபேட் கொண்டு சரிபார்க்கப்படும்.

வாக்குபதிவு முடிந்த பின்னர்,  அரசியல் பிரமுகர்கள்-ஏஜெண்டுகள்  முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்படுகின்றன. அவர்களிடம் இருந்து கையெழுத்தும் பெறப்படுகின்றது.பின்னர் மூன்றடுக்கு பாதுகாப்புடன் அறையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அந்த அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதன்காரணமாக வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியில் எடுத்துச்செல்ல வாய்ப்பில்லை. எந்த முறைகேடும் நடந்திட வாய்ப்பில்லை.

இன்றைய வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கட்சி ஏஜெண்டுகள், தேர்தல் பார்வையாளர்களை அணுகலாம்.
ஏஜெண்டுகளிடம் எத்தனை வாக்கு எந்திரங்கள் எண்ணிக்கைக்காக கொண்டு வரப்பட்டன, வாக்குகள் எண்ணப்பட்டன  என்பது குறித்த பட்டியல் ஏஜெண்டுகளிடம் காண்பிக்கப்பட்டு சரிபார்க்கப்படும்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் 5 விவிபேட் எந்திரங்கள் எண்ணி பார்க்கப்படும். அதனால் முறைகேடு நடைபெற சிறிதும் வாய்ப்பில்லை. முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடனேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார்.


Next Story