ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு; உடுப்பி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு!
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து மாணவ மாணவிகள் வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகை தந்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மத மாணவிகள் ஐகோர்ட் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுப்பி மாவட்டம் உட்பட அம்மாநிலத்தின் பல இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நிலையில் உடுப்பி மாவட்டத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்தார்.
அதன்படி, உடுப்பி மாவட்டத்தில் இன்று காலை, மீண்டும் வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட தொடங்கின.
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து மாணவ மாணவிகள் வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகை தந்தனர்.
பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டாலும், தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவு மற்றும் பொதுஇடங்களில் போராட்டம், கொண்டாட்டங்கள், கூட்டம் கூட விதிக்கப்பட்ட தடை உத்தரவு வரும் 21-ம் தேதி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் வழக்கு
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.
ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் இஸ்லாமிய மத மாணவிகள் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத சட்டத்தில் அவசியமானது இல்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும்.
ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story