ஒன்றரை மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டிடம்! கட்டுமானத்துறை வரலாற்றில் புதிய மைல்கல்!
7 மாடி கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்து தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி ஆர் டி ஓ) சாதனை படைத்துள்ளது.
பெங்களூரு,
நாட்டின் கட்டுமானத் துறையின் வரலாற்றில் முதன்முறையாக, பெங்களூரு நகரில் 7 மாடி கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்து தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சாதனை படைத்துள்ளது.
இன்று நடைபெறும் திறப்புவிழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் 22 நவம்பர் 2021 அன்று நாட்டப்பட்டது. அதன் கட்டுமானம் பிப்ரவரி 1, 2022 அன்று தொடங்கியது.
இந்த விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப் சி எஸ்) வளாகம், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கலப்பின தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1.3 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான உத்தேச செலவு ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன கட்டிடம் , தேசிய கட்டிடக் குறியீட்டின்படி, (வி ஆர் எப்) ஏசி அமைப்பு, மின்சார அமைப்பு மற்றும் தீ விபத்தை தவிர்க்கும் பாதுகாப்பு அமைப்புகளுடன் எழுப்பப்பட்டுள்ளது. ஸ்டீல் கொண்டு தூண்கள் மற்றும் மேல் அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் ரூர்க்கி நகர ஐஐடி குழுவினர் இந்த கட்டிட அமைப்புக்கான வடிவமைப்பில் தேவையான உதவிகளை வழிகியுள்ளனர்.
இந்த கட்டிடம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் சார்ந்த நடவடிக்கைகளுக்கும், போர் விமானங்களின் “விமான கட்டுப்பாட்டு அமைப்பு” உள்ளிட்ட மேம்பாட்ட ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கட்டிடம் ஐந்தாம் தலைமுறை அதிநவீன (ஏ எம் சி ஏ)விமானங்களின் உள்நாட்டு வளர்ச்சிக்கான மையமாக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை பெங்களூருவில் இருக்கும் வானூர்தி வளர்ச்சி ஸ்தாபனம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து செயல்படுத்தும் என்று டி ஆர் டி ஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திட்டம் குறித்த விரிவான விளக்கப்படம் ஒன்றை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story