உக்ரைனில் பலியான நவீனின் உடலை தானம் செய்ய அவருடைய பெற்றோர் முடிவு


உக்ரைனில் பலியான நவீனின் உடலை தானம் செய்ய அவருடைய பெற்றோர் முடிவு
x
தினத்தந்தி 20 March 2022 2:42 AM IST (Updated: 20 March 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில், ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் பலியான நவீனின் உடல் விமானம் மூலம் நாளை (திங்கட் கிழமை) பெங்களூருவுக்கு கொண்டுவரப்படுகிறது. அவரது உடலை தானம் செய்ய அவருடைய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா போர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் தங்கி டாக்டருக்கு படித்து வந்த ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபர் கடந்த 1-ந் தேதி ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உயிரிழந்தார்.

பதுங்கு குழியில் பதுங்கி இருந்த அவர் உணவு மற்றும் பிற பொருட்களை வாங்க சென்றபோது ஏவுகணை தாக்குதலில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் கார்கிவ் நகரில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதற்கிடையே நவீனின் உடலை தாயகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டன.

நாளை அதிகாலை...

பிரதமர் மோடியும் நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நவீனின் உடலை உக்ரைனில் இருந்து ஒரு ஏஜென்டை நியமித்தது. இதுபற்றி உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்க மாநில அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரியான மனோஜ் ராஜன் கூறியதாவது:-

மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் நியமிக்கப்பட்ட ஏஜென்டு நவீனின் உடலை மீட்டுள்ளார். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து போலந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்மூலம் அந்த ஏஜென்டு அனைத்து ஆவண பரிவர்த்தனைகளையும் முடித்து நவீனின் உடலை உக்ரைனில் இருந்து போலந்து நாட்டில் உள்ள வார்ஷா நகரத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து போலந்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம்(எண்-இ.கே.0568) மூலம் நவீனின் உடல் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகிற 21-ந் தேதி(நாளை) அதிகாலை 3 மணிக்கு கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடலை தானமாக வழங்க முடிவு

பெங்களூருவில் இருந்து நவீனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஹாவேரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடல் ஹாவேரியில் உள்ள அவரது வீட்டுக்கு நாளை(திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கொண்டு செல்லப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி நவீனின் தந்தை சேகரகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

நவீனின் உடல் வருகிற 21-ந் தேதி(நாளை) காலை 9.30 மணிக்கு வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு விடும் என்று எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் தெரிவித்தனர். அருண்குமார் எம்.எல்.ஏ., தாசில்தார் சங்கர் ஜி.எஸ். ஆகியோரும் என்னை தொடர்பு கொண்டு பேசி இந்த தகவலை உறுதி செய்தனர். எனது மகனின் உடலை இறுதி அஞ்சலிக்கு பிறகு தாவணகெரேவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.


Next Story