அசாம் தேயிலைக்கு இவ்வளவு மதிப்பா..! ஒரு கிலோ சிறப்பு தேயிலை ரூ.99,999க்கு விற்பனையாகி சாதனை!
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.7,500 கோடிக்கு மேல் அசாம் தேயிலை விற்பனை செய்யப்பட்டது.
கவுகாத்தி,
உலகப்புகழ்பெற்ற அசாம் தேயிலைக்கு, நுகர்வோரிடம் எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில், ஆண்டுதோற்ம் நடைபெறும் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.7,500 கோடிக்கு மேல் அசாம் தேயிலை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி தேயிலை ஏல மையத்தின் தரவுகளின்படி, 2020-21 ஆம் ஆண்டில் தேயிலை ஏல மையத்தில் மொத்தம் 18.298 கோடி கிலோ தேயிலை விற்பனை செய்யப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 17.787 கோடி கிலோ விற்பனையானது.
கொரோனா காலகட்டத்தில் 2020-21ல், ரூ.4,127 கோடி மதிப்புள்ள தேயிலை விற்பனையானது. 2021-22ல் பிப்ரவரி வரை ரூ.3,320 கோடி தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி தேயிலை ஏல வாங்குவோர் சங்கத்தின் செயலாளர்,தினேஷ் பிஹானி கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ரூ.7500 கோடிக்கு மேல் தேயிலை விற்பனையானது.
கொரோனா தொற்றுநோய் காலகட்டத்திற்கு முன்பு, 2019-20ல் எங்களின் நிகர வருவாய் ரூ.2,790 கோடியாக இருந்தது. தேயிலையின் சராசரி விலை ரூ.139.07க்கு விற்கப்பட்டது.
கொரோனா காலகட்டத்தில், 182.98 மில்லியன் கிலோ தேயிலை சராசரி விலை ரூ.225.55க்கு விற்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் நமது நிகர வருவாய் சுமார் ரூ.7500 கோடி ஆகும்” என்று தெரிவித்தார்.
2021-22 காலகட்டத்தில், கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில், அசாம் சிறப்பு தேயிலையானது, ஒரு கிலோவுக்கு ரூ.99,999 என்ற சாதனை விலையில் விற்கப்பட்டது.
பிப்ரவரி 14 அன்று பார்கான் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் மூலம் ‘நஹோர்ச்சுக்பரி கோல்டன் பேர்ல்’ என்று பெயரிடப்பட்ட அசாம் சிறப்புத் தேயிலை, ஒரு கிலோ ரூ.99,999க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது ரூ.1 லட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைவு.
Related Tags :
Next Story