பேரழிவு ஆயுதங்களுக்காக நிதியுதவி வழங்க தடை: மக்களவையில் மசோதா அறிமுகம்
இந்தியாவில் பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடை செய்வதற்கான மசோதா, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் வினியோக அமைப்புகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அவற்றின் தயாரிப்பை மட்டும் தடை செய்கிறது.
தற்போது மத்திய அரசு, பேரழிவு ஆயுதங்களுக்கும், அவற்றின் வினியோக முறைகளுக்கும் நிதி வழங்குவதை தடை செய்வதற்கு வகை செய்து அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர விரும்பியது.
இதற்கான மசோதாவை மக்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டபோது இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது:-
சமீப காலங்களில் பேரழிவு ஆயுதங்களின் பரவல் மற்றும் அவற்றின் வினியோக முறைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் சட்ட விதிகள் விரிவடைந்துள்ளன. பேரழிவு ஆயுதங்கள் அவற்றின் வினியோக முறைகளின் பெருக்கத்திற்கு நிதி அளிப்பதற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதிக்கிறது.
இவற்றை கருத்தில் கொண்டு, பேரழிவு ஆயுதங்களை பெருக்குவதற்கு நிதி உதவி செய்வதற்கும், அவற்றின் வினியோக முறைகளுக்கும் எதிராக நமது சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் வகையில், சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story