காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வலுப்பெறுகிறது - பிரதமர் மோடி
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வலுப்பெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாஜகவின் 42-வது நிறுவன நாளையொட்டி அக்கட்சி தொண்டர்களிடம் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நவராத்திரி தினத்தின் 5-வது நாள் இன்று நாம் துர்கை அம்மனை வழிபடுகிறோம். துர்கை அம்மன் தாமரை இருக்கையில் அமர்ந்து 2 கைகளில் தாமரை மலர்களை வைத்துக்கொண்டுள்ளார். துர்கை அம்மனின் ஆசி நாட்டு மக்கள் அனைவருக்கும், பாஜக தொண்டர்களுக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
இந்த ஆண்டின் நிறுவன தினம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக இந்த ஆண்டு நாம் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறேம். வேகமாக மாறிவரும் உலக சூழ்நிலையால் இந்தியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. பாஜகவின் இரண்டை இன்ஞ்சின் அரசு 4 மாநிலங்களில் மீண்டும் அரசமைத்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின் ஒரு கட்சி மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
உலகம் முன் தற்போது இந்தியா தனது நலனில் அக்கறை கொண்டு எந்தவித அழுத்தம் பயமின்றி உறுதியாக நிற்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இரண்டாக பிரிந்து இருக்கும்போது, மனிதாபிமானம் குறித்து அழுத்தமாக பேசும் நாடாக இந்தியா உள்ளது.
இந்தியா இதுவரை 180 தடுப்பூசி டோஸ்களை மக்களுக்கு செலுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் 80 கோடி ஏழைகளுக்கு இந்தியா இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கி வருவதை உலகம் பார்க்கிறது. ஏழைகள் பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
சில கட்சிகள் பல ஆண்டுகளாக வாக்கு அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சிலருக்கு மட்டுமே வாக்குறுதிகளை அளிப்பது, பெரும்பாலான மக்களை விஷயங்களுக்காக ஏங்க வைக்கிறது. ஒருதலைப்பட்சம் மற்றும் ஊழல் வாக்கு அரசியலின் பக்க விளைவுகள். இந்த சவால்களை பாஜக எதிர்கொண்டது மட்டுமின்றி இதனால் ஏற்படும் விளைவுகளை மக்களிடம் புரியவைப்பதிலும் வெற்றியும் பெற்றுள்ளது.
தற்போது இரு அரசியல்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஒன்று குடும்பத்தின் மீதான பாசம் மற்றொன்று நாட்டின் மீதான பாசம். வெவ்வேறு மாநிலங்களில் சில அரசியல் கட்சிகள் தங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மாநிலங்கள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் குடும்ப அரசியல் மூலம் அவர்கள் ஒன்றுபடுகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வலுப்பெற்று வருகிறது’ என்றார்.
Related Tags :
Next Story