‘பிரதமரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் கட்சி’ நாங்கள் அல்ல..!! - ராகுல்காந்தியை சாடிய மாயாவதி
பிரதமரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் கட்சி நாங்கள் அல்ல என்று ராகுல் காந்தியை மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் போட்டியை எதிர்கொண்டன. தொடர்ந்து 2வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி முன்வந்தது. அவரை (மாயாவதியை) முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கவும் முன் வந்தோம். ஆனால், அவர் எங்களுடன் பேசக்கூட இல்லை. ஏனெனில், சி.பி.ஐ., அமலாக்க துறை மற்றும் பெகாசஸ் ஆகியவற்றுக்கு அவர் பயந்து விட்டார். இதனால், ஆளும் பா.ஜ.க.வுக்கு வெற்றி பெற தெளிவான பாதை அமைத்து தந்து விட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் கட்சி நாங்கள் அல்ல என்று ராகுல் காந்தியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் காங்கிரஸ் 100 முறை யோசிக்க வேண்டும். அவர்களால் பா.ஜ.கவிடம் இருந்து வெற்றியை பெற முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இருந்தும் கூட எதுவும் செய்யவில்லை. தனது சொந்த கட்சியை கூட ஒழுங்காக அமைக்க முடியவில்லை. இந்த அற்ப விஷயங்களைக் காட்டிலும், உ.பி. தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் இப்போது கவனம் செலுத்த வேண்டும்
இப்போது பிரியங்கா காந்தி கூட அமலாக்க துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளுக்கு நான் பயப்படுகிறேன் என்று கூறி வருகிறார். இவை அனைத்தும் உண்மை இல்லை. இந்த பிரச்சனைகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் போராடி வென்றுள்ளோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி போன்று நாடாளுமன்றத்தில் பிரதமரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் கட்சி நாங்கள் அல்ல. மேலும் உலகம் முழுக்க வேடிக்கை பார்க்க சுற்றிக் கொண்டிருக்கும் கட்சியும் நாங்கள் அல்ல” என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story