'இந்தியாவை சீண்டினால் யாரையும் விடமாட்டோம்' - சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை


image courtesy: PTI
x
image courtesy: PTI
தினத்தந்தி 16 April 2022 1:16 AM IST (Updated: 16 April 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவை சீண்டினால் யாரையும் விடமாட்டோம் என சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

வாஷிங்டன்,

இந்திய-அமெரிக்க ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளின் பேச்சுவார்த்தை சமீபத்தில் வாஷிங்டனில் நடந்தது. இதற்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்கவாழ் இந்தியர்களை அவர் சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், லடாக் மோதல் தொடர்பாக சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் ரஷியாவுடனான இந்தியாவின் நெருக்கத்தை எதிர்க்கும் அமெரிக்காவுக்கும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

லடாக் மோதலின்போது இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள்? அரசு என்ன முடிவு எடுத்தது? என்பது பற்றியெல்லாம் வெளிப்படையாக என்னால் கூற முடியாது.

ஆனால் இந்தியாவை சீண்டினால், யாரையும் விடமாட்டோம் என்னும் செய்தி அவர்களுக்கு (சீனா) சொல்லப்பட்டது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஒரு நாட்டுடன் (ரஷியா) இந்தியா நல்ல உறவை கொண்டிருந்தால், அது மற்றொரு நாட்டுடனான (அமெரிக்கா) உறவை பாதிக்கிறது என்பது அர்த்தமல்ல. இதுபோன்ற ராஜதந்திரத்தை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இனியும் ஏற்காது.

சர்வதேச உறவுகள் விவகாரத்தில் பூஜ்ஜிய விளையாட்டை நாங்கள் நம்புவதில்லை. இரு நாடுகளுக்கும் ஆதாயம் என்ற அடிப்படையிலேயே இருதரப்பு உறவுகளை இந்தியா பேணுகிறது.

இந்தியாவின் பிம்பம் மாறிவிட்டது. இந்தியாவின் கவுரவம் அதிகரித்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரும் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இந்தியா இனியும் ஒரு பலவீனமான நாடு இல்லை என்பதை சர்வதேச அளவில் மக்கள் உணர்ந்து விட்டார்கள். சக்தி வாய்ந்த நாடாக மாறிவிட்டது. இன்று உலகுக்கே தலைமை தாங்கும் திறன் பெற்றிருக்கிறது. இதை உலகம் தற்போது உணர்ந்து விட்டது.

இந்தியாவில் பல பிரதமர்கள் இந்த பதவிக்கு வந்த பிறகுதான் நாட்டின் தலைவர் ஆனார்கள். ஆனால் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, வாஜ்பாய், நரேந்திர மோடி போன்றவர்கள், பிரதமர் ஆகும் முன்னரே தலைவர்களாக விளங்கியவர்கள்.

அந்தவகையில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒரு வலுவான நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Next Story