அரசியல் கொலைகளால் அதிரும் கேரளா! எஸ்.டி.பி.ஐ பிரமுகர் கொல்லப்பட்ட மறுநாளே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை!!
கேரள மாநிலம் பாலக்காடு நகரின் மையப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மேலமுரியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்கல்வி பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.இன்று தனது கடையில் ஸ்ரீநிவாசன் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இதே பாலக்காட்டில் தான், நேற்று எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சுபைர், தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி பைக்கிலிருந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் 45 வயதான சுபைரை அவரது தந்தையின் கண்முன்பே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
சுபைரை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் என எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்புகள் குற்றம் சாட்டின. ஆனால், குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை.
ஆனால், கொலையாளி பயன்படுத்திய காரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதில் உள்ள எண்ணை வைத்து விசாரித்ததில் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சஞ்சித் என்பவருடைய கார் என்பது தெரியவந்தது. ஆனால், இதை சஞ்சித்தின் தந்தை மறுத்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் சஞ்சித் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலக்காட்டில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டவர்.
சுபைர் கொல்லப்பட்டதை போன்றே அவர் மீது கார் மோதி, கீழே விழுந்தபின் அவரை மர்ம கும்பல் வெட்டிக்கொன்றது. அதன் பின்னர் 2021 டிசம்பர் 18 ஆம் தேதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். ஷான் கொல்லப்பட்ட அடுத்த 12 மணி நேரத்தில் பாஜகவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று சுபைர் கொல்லப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஸ்ரீநிவாசன் வெட்டிக் கொல்லப்பட்டது பழிவாங்கும் செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலையின் பின்னணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டி இருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களில் நான்கு உயிர்களைப் பலிகொண்ட தொடர் கொலை நிகழ்வுகளில், கடைசியாக அரங்கேறியிருப்பது ஸ்ரீநிவாசன் மரணம் ஆகும் .
Related Tags :
Next Story