காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு 14 ஆயிரம் அப்பாவிகள் பலி - உள்துறை அமைச்சகம் தகவல்
காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு 14 ஆயிரம் அப்பாவிகள் பலியானதாக மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் பயங்கரவாதத்துக்கு 14 ஆயிரம் அப்பாவிகள் பலியானார்கள். 1990-களின் தொடக்கத்தில் சுமார் 65 ஆயிரம் பண்டிட் குடும்பங்கள் வெளியேறின என்று மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் 2020-2021 நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காஷ்மீரில் கடந்த 1990-களின் தொடக்கத்தில் பயங்கரவாதம் காரணமாக, சுமார் 65 ஆயிரம் காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறின. ஜம்மு, டெல்லி மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் குடியேறின.
பண்டிட்டுகள் மட்டுமின்றி, சில சீக்கிய, முஸ்லிம் குடும்பங்களும் காஷ்மீரை விட்டு வெளியேறி ஜம்மு, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் குடியேறின.
காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்கிய 1990-களில் இருந்து 2020-ம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில், பயங்கரவாதத்தால் 14 ஆயிரத்து 81 பொதுமக்களும், 5 ஆயிரத்து 356 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் குடியமர்த்துவதற்காக காஷ்மீர் அரசில் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த 6 ஆயிரம் ஊழியர்களை குடியமர்த்த 6 ஆயிரம் தற்காலிக வீடுகள் கட்ட ரூ.920 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தூண்டுதலுடன் 2014 முதல் 2020-ம் ஆண்டுவரை காஷ்மீரில் 2 ஆயிரத்து 546 பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன. அதே காலகட்டத்தில், 1,776 ஊடுருவல் முயற்சிகள் நடந்தன.
நாட்டில் நக்சல் வன்முறை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020-ம் ஆண்டு 41 சதவீத வன்முறை சம்பவங்களும், 54 சதவீத மரணங்களும் குறைந்துள்ளன.
நக்சல் வன்முறை சம்பவங்கள், வெறும் 30 மாவட்டங்களுக்குள் சுருங்கி விட்டன. 2020-ம் ஆண்டு, சத்தீஷ்காரில்தான் அதிகமான நக்சல் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதிவரை கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்தியாவுக்கு மொத்தம் 32 லட்சத்து 79 ஆயிரத்து 315 வெளிநாட்டினர் வந்தனர். அவர்களில் 61 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்களும், 4 ஆயிரத்து 571 பாகிஸ்தானியர்களும் அடங்குவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story