மண்டபத்திற்கு 5 மணி நேரம் தாமதம்: மணமகனின் நடன மோகத்தால் நின்ற திருமணம்..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 May 2022 8:50 AM IST (Updated: 4 May 2022 8:50 AM IST)
t-max-icont-min-icon

மணமகன் தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.

மும்பை, 

டி.ஜே. இசைக்கு நடனமாடி மண்டபத்திற்கு மணமகன் தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.

பொதுவாக வரதட்சணை போன்ற காரணங்களால் திருமணங்கள் நின்ற சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. மணமகன் அல்லது மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவங்களால் கூட பல திருமணங்கள் முகூர்த்த நேரம் வரை சென்று நின்று இருக்கின்றன. 

இந்தநிலையில் மராட்டியத்தில் மணமகனின் நடன மோகத்தால் திருமணம் நின்ற விநோத சம்பவம் நடந்து உள்ளது.அங்குள்ள புல்தானா மாவட்டம் மல்காபூர் பங்ரா கிராமத்தை சேர்ந்த மணமகனுக்கும், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 22-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு மாலை 4 மணிக்கு சுபமுகூர்த்தம் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மணமகனும், அவரது குடும்பத்தினர், நண்பர்களும் டி.ஜே. இசைக்கு நடனமாடியபடியே சுமார் 5 மணி நேரம் தாமதமாக மண்டபத்திற்கு வந்தனர்.

இதனால் மணப்பெண் வீட்டாருக்கும், மணமகன் வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. 2 தரப்பினரும் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதையடுத்து மல்காப்பூர் பங்ரா கிராம அமைதி கமிட்டியினரும் இரு தரப்பை சமானதாப்படுத்தினர். அப்போது 2 தரப்பினரும் மோதிக் கொண்டதற்காக ஒருவரிடம், ஒருவர் மன்னிப்பு கேட்டு கொண்டனர். எனினும் மணமகன் குடும்பத்தினரின் செயலால் கடுப்பான மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினர்.

மேலும் அவர் மணமகனின் குடும்பத்தினர் மண்டபத்தில் இருந்து சென்ற பிறகு மணப்பெண்ணின் தந்தை, பெண்ணை மண்டபத்தில் இருந்த உறவுக்கார வாலிபருக்கு தடாலடியாக திருமணம் செய்து வைத்தார். இது குறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், "முகூர்த்த நேரம் முடிவதற்குள் வருமாறு மணமகனின் வீட்டாரிடம் பல முறை கூறினோம். அவர்கள் அதை மதிக்கவேயில்லை. மாலை 4 மணிக்கு முகூர்த்தம் இருந்தநிலையில் மணமகன் மற்றும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர் சுமார் 5 மணி நேரம் டி.ஜே.வுக்கு நடனமாடி கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் மண்டபத்தில் வந்து ரகளையில் ஈடுபட்டனர்" என்றார்.

இதற்கிடையே மணப்பெண்ணுக்கு வேறுநபருடன் திருமணம் நடந்ததை மறுநாள் மணமகனின் குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். எனவே உடனடியாக அவர்கள் மணப்பெண்ணின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டனர். அப்போது கிராம அமைதி கமிட்டியினர் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து திருமணத்திற்காக மணமகளுக்கு கொடுத்த தங்க சங்கிலி, புடவை ஆகியவற்றை திரும்ப பெற்று கொண்ட மணமகனின் வீட்டார், அன்றைய தினமே மணமகனுக்கும் தூரத்து உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம அமைதி கமிட்டி தலைவர் கூறுகையில், "தற்போது டி.ஜே. இசைக்கு நடனமாடுவது டிரெண்டாகி விட்டது. அதனால் திருமணம் நின்றது துரதிருஷ்டவசமானது" என்றார். திருமணத்தில் ஆட்டம், பாட்டம் என உற்சாகம் இருக்கலாம். ஆனால் திருமணமே நிற்கும் அளவுக்கு இதுபோன்ற கொண்டாட்டங்கள் தேவைதானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story