தேர்தல் தொடர்பாக பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் மே-20ம் தேதி தொடக்கம்; பிரதமர் மோடி பங்கேற்பு!
தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்குடன் பாரதிய ஜனதா பணியாற்றி வருகிறது.
புதுடெல்லி,
பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மே-20,21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசுவார் என தெரிகிறது.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் நடைபெறவிருக்கின்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் வெற்றி குறித்த வியூகம் வகுப்பதுடன், கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளபோதிலும், தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்குடன் பாரதிய ஜனதா பணியாற்றி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர் தோல்வி கண்ட காங்கிரஸ் கட்சியும், வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக கட்சி அமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பாக பாஜக விரிவாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், இணைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றம், தேர்தலுக்கு ஏற்ப நிர்வாக அமைப்புகளில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் மே 20ம் தேதியும், பொது செயலாளர்கள் கூட்டம் மே 21ம் தேதியும் நடக்கிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஓராண்டுக்குள் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோகிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story