தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கோப்புப் படம் ANI
x
கோப்புப் படம் ANI
தினத்தந்தி 7 May 2022 10:14 PM GMT (Updated: 7 May 2022 10:24 PM GMT)

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய மந்திரிகள் மற்றும் கல்வி, தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், திறன் மேம்பாட்டுத்துறை இணை மந்திரி  ராஜீவ் சந்திரசேகர், கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், அன்னபூர்ணா தேவி மற்றும் கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங், பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பிரதமரின் ஆலோசகர், யுஜிசி தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கை, அணுகுதல், சமத்துவம், தரம் ஆகிய குறிக்கோள்களுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார். பள்ளிக் குழந்தைகள் அதிகப்படியான தொழில்நுட்ப வெளிப்பாட்டைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு முறைகளில் கற்றல் முறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பிதமர் குறிப்பிட்டார். 

படிப்பை பாதியில் நிறுத்திய பள்ளிக் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது,  உயர் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை  நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து, செழுமைப்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

ஆய்வுக்கூடங்கள் உள்ள பள்ளிக்கூடங்கள், மண் பரிசோதனைக்காக தங்களது சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் யோசனை தெரிவித்தார். தேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

Next Story