வரதட்சணை கொடுமை என மனைவி புகார்; 7வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை - பரபரப்பு தகவல்
மாமனார் குடும்பத்தினருக்கு தண்டனை கிடைக்கும் வரை தனது அஸ்தியை கரைக்க வேண்டாம் எனவும் தற்கொலை செய்துகொண்ட நபர் கூறியுள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலின் 7-வது மாடியில் இருந்து குதித்து கடந்த வியாழக்கிழமை ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்துகொல்வதற்கு முன்னர் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அந்த நபர் வீடியோவாக எடுத்து அந்த வீடியோவை தனது சகோதரனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதில், தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமத்திய வரதட்சனை கொடுமை புகாரே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் ரொட்கிலா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் அகர்வால். இவர் ஜார்கண்ட் ஜம்ஷத்பூரை சேர்ந்த வர்ஷா என்ற பெண்ணை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராகுலுக்கும், வர்ஷாவுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வர்ஷா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் தனது கணவர் ராகுல் அவரது தாய், தந்தையுடன் சேர்ந்துகொண்டு தன்னை வரதட்சனை கொடுமை செய்வதாக வர்ஷா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகுல் மற்றும் அவரது தாய் தந்தை என குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கால் ராகுல் தனது குழந்தைகளை பார்ப்பதும் தடைபட்டுள்ளது. மேலும், வயதான தனது தாய் தந்தை மனைவி தொடர்ந்த வழக்கால் போலீஸ் நிலையம், கோர்ட்டு என அலைக்கழிக்கப்படுதாலும் ராகுல் மிகுந்த மனவேதனையடைந்துள்ளார்.
இதையடுத்து, தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த வியாழக்கிழமை ஜம்ஷத்பூர் சென்ற ராகுல் அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். மிகுந்த மனவேதனையில் இருந்த ராகுல் ஓட்டலில் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது சகோதரனுக்கு ராகுல் அனுப்பிய வாட்ஸ் அப் வீடியோவில், எனது மாமனார், மாமியார், மனைவி வர்ஷா, மனைவியின் சகோதர் ஆகியோரால் எனக்கு நிகழ்ந்த கொடுமையால் நான் இந்த தற்கொலை முடிவை எடுக்கிறேன். எனது மாமனாரின் குடும்பத்தினருக்கு தண்டனை கிடைக்கவேண்டும். அதன்பின்னரே எனது அஸ்தியை ஹரித்வாரில் ஆற்றில் கரைக்க வேண்டும். அதுவரை எனது அஸ்தியை வங்கி லாக்கரில் வையுங்கள்.
எனது மனைவி மிகவும் நல்ல பெண். ஆனால், எனது மனைவியை அவரது தாயார் கெட்டவளாக மாற்றிவிட்டார். எனது மனைவியையும், குழந்தைகளையும் நான் மிகவும் காதலிக்கிறேன். எனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்துவைக்க எனது மாமனார் முயற்சிக்கிறார்.
அதனால், விவாகரத்திற்காக என்னை கொடுமைபடுத்தினர். என்னால் எனது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் கோர்ட்டிற்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைக்கழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் குழந்தைகள் இல்லாமல் வாழ முடியவில்லை. எனது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க வேண்டும் என நான் கொண்டிருந்த கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் முன்பு செய்த பாவங்களால் தான் இந்த சூழ்நிலை எனக்கு உருவாகியிருக்கும் என நினைக்கிறேன்’ என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ராகுல் தனது சகோதரனுக்கு அனுப்பிய வீடியோவை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story