87 வயதாகும் அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா 10-ம் வகுப்பு தேர்ச்சி..!!


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 12 May 2022 12:01 AM GMT (Updated: 12 May 2022 12:01 AM GMT)

87 வயதாகும் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றார்.

சண்டிகார், 

‘வயது என்பது வெறும் எண்’ -இது பலரும் சொல்வதுதான். ஆனால் ஒரு சிலரே அதை நிஜத்தில் நிரூபித்துவருகிறார்கள்.

அவர்களில் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார், அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா.

பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாத சவுதாலாவுக்கு, 10-ம் வகுப்பு ‘பாஸ்’ செய்துவிட வேண்டும் என்பது ஏக்கம்.

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்த சவுதாலா, அங்கிருந்தபடியே கடந்த 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கிலப் பரீட்சை மட்டும் எழுதவில்லை. அதனால், சவுதாலா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வையும் எழுதியபோதும் அதன் முடிவை அரியானா பள்ளிக் கல்வி வாரியம் நிறுத்திவைத்துவிட்டது.

அதனால், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 10-ம் வகுப்பு ஆங்கிலத் தாளை எழுதிய சவுதாலா, 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ஆக, ஒரே தாவலில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றிவாகை சூடிவிட்டார். சவுதாலாவுக்கான மதிப்பெண் சான்றிதழை மாநில கல்வித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் வழங்க, அதை அவர் பெருமிதத்தோடு பெற்றுக்கொண்டார்.

மற்றொரு சுவாரசியம், சவுதாலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானதாக கூறப்படும் ‘தஸ்வி’ என்ற இந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் சிறையில் இருக்கும் அரசியல்வாதி, 10-ம் வகுப்பு தேர்வை எழுதி ‘பாஸ்’ செய்வது போல கதை அமைந்திருந்தது.

தற்போது நிஜ கதாநாயகர் சவுதாலா 10-ம் வகுப்பில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவருக்கு ‘தஸ்வி’ நிழல் நாயகர் அபிஷேக் பச்சன், நாயகி நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

படிப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் இந்த வயதில் சவுதாலா ‘ஆக்டிவ்’ ஆகத்தான் இருக்கிறார். இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவரான இவர், இப்போதும் அரியானா மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று வருகிறார்.

ஆனால் படிப்பில் தனது நீண்டகால கனவு நனவான மகிழ்ச்சியில், ‘ஆத்தா... நான் பாஸ் ஆகிட்டேன்’ என்று கூவாத குறையாக குஷியாகி இருக்கிறார் இந்த ‘தாத்தா’ அரசியல்வாதி.


Next Story