சமஸ்கிருதம் உட்பட 8 இந்திய மொழிகள் கூகுள் டிரான்ஸ்லேட்டில் புதிதாக சேர்ப்பு..!
கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம் உட்பட 8 இந்திய மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
நியூயார்க்,
பன்மொழி மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரான்ஸ்லேட்டில் (Googlr Translate) பிராந்திய மொழிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமஸ்கிருதம் உட்பட 8 இந்திய மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று இரவு நடைபெற்ற வருடாந்திர கூகுள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமஸ்கிருதம், அஸ்ஸாமி, போஜ்புரி, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மிசோ மற்றும் மெய்ட்டீலோன் (மணிப்பூரி) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூகுள் டிரான்ஸ்லேட் சேவை வழங்கும் இந்திய மொழிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மொத்தமாக எட்டு இந்திய மொழிகள் உட்பட 24 மொழிகள் கூகுள் டிரான்ஸ்லேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 133 மொழிகளுக்கு கூகுள் டிரான்ஸ்லேட் மொழிபெயர்ப்பு சேவை வழங்குகிறது.
புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் உரைகளுக்கு (Text) மொழிபெயர்ப்பு செய்யும் வசதியுடன் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. குரல் மூலம் மொழிபெயர்ப்பு செய்தல் மற்றும் பிற அம்சங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 கோடிக்கும் அதிகமான மக்கள் புதிதாக சேர்க்கப்பட்ட மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, மிசோ வடகிழக்கு இந்தியாவில் சுமார் 8 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. மேலும் மத்திய ஆப்பிரிக்கா முழுவதும் 4.5 கோடிக்கும் அதிகமான மக்களால் லிங்கலா மொழி பேசப்படுகிறது. சமஸ்கிருதம் 20 ஆயிரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story