கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு..!


கோப்புப் படம் PTI
x
கோப்புப் படம் PTI
தினத்தந்தி 16 May 2022 2:18 AM GMT (Updated: 2022-05-16T07:48:43+05:30)

கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகிறது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகள் காரணமாக மாணவர்களின் கல்வியும் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் சரியாக கல்வி கற்க முடியாத நிலை உண்டானது. கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தாலும், மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் வகையிலும் 2022-23-ம் கல்வி ஆண்டில் பள்ளிகளை முன்கூட்டியே திறக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.

அதன்படி கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திட்டமிட்டபடி திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கடந்த சில நாட்களாக தூய்மை பணிகள் நடைபெற்றது.

அதே நேரத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இதையடுத்து, ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளை இன்று உற்சாகமாக வரவேற்க ஆசிரியர்கள் தயாராகி உள்ளனா். 

மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி, துமகூரு மாவட்டத்தில் உள்ள எம்பிரஸ் பப்ளிக் பள்ளிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மதியம் 12.30 மணியளவில் செல்கிறார். பின்னர் அவர், 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளியை திறந்து வைக்கிறார். 

அந்த பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்க இருக்கிறார். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாததால், மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் வகையில் கற்கும் திறனை அதிகரித்தல் என்ற திட்டத்தையும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க இருக்கிறார்.

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story