இந்தியாவில் புதிதாக 224 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 429 பேர் மீண்டனர்.
புதுடெல்லி,
நம் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தொற்று பாதிப்பு, ஆஸ்பத்திரி சேர்க்கை, இறப்பு எல்லாமே குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் தொற்றால் 2 பேர் இறந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுக்கு ஒருவர் மட்டுமே பலி ஆனார். அவர் டெல்லியில் பலி ஆகி உள்ளார். தொற்றால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் 310 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று புதிதாக 224 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் 98 ஆயிரத்து 167 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொற்றினால் நாட்டில் இதுவரை 4 கோடியே 49 லட்சத்து 90 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 429 பேர் மீண்டனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 908 பேர் மீண்டுள்ளனர். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 206 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,503 ஆக குறைந்து விட்டது.