மேற்கு வங்காளத்தில் 24 ஆயிரம் ஆசிரியர் நியமனம் ரத்து - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு


மேற்கு வங்காளத்தில் 24 ஆயிரம் ஆசிரியர் நியமனம் ரத்து - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
x

கடந்த 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 24 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி.

இவர், கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வி துறை மந்திரியாக செயல்பட்டபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. அமைப்புக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்க துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு அமலாக்கத்துறையினர் 27 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். இந்த ஊழல் வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் எம்.எல்.ஏ.வான மாணிக் பட்டாச்சார்யா என்பவரையும் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது.

மேலும் இந்த ஊழல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான ஜிபன் கிருஷ்ண சஹா என்பவரை சி.பி.ஐ. கடந்த ஆண்டு கைது செய்தது. இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்பேரில் கொல்கத்தா ஐகோர்ட்டில் சிறப்பு விசாரணை அமர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி, நீதிபதிகள் டெபாங்சு பசக் மற்றும் எம்.டி ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று பிறப்பித்த உத்தரவில், "2016ம் ஆண்டு ஆசிரியர் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த சுமார் 24 ஆயிரம் ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் 4 வாரங்களுக்குள் திரும்பி செலுத்த வேண்டும். இதனை வசூலிக்கும் பணிக்கு மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேற்கு வங்காள பள்ளி சேவை ஆணையம், புதிதாக ஆசிரியர் நியமன செயல்முறையை தொடங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் ஒருவரான சோமா தாஸ் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், மனிதாபிமான அடிப்படையில் அவர் வேலையில் தொடர நீதிமன்றம் தனது உத்தரவில் விலக்கு அளித்துள்ளது.


Next Story