உலகின் 2-வது பெரிய பணக்காரர் இந்தியாவை சேர்ந்தவர்; அவரது தொழிலை வளர்த்தது உங்கள் பணம் - ராகுல்காந்தி
தொழிலை வளர்க்க அவருக்கு பணம் கொடுத்தது யார்? அது பொதுத்துறை வங்கியில் இருந்து வந்தது... அது உங்கள் பணம் என ராகுல்காந்தி கூறினார்.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பாத யாத்திரை தற்போது கேரளாவை எட்டியுள்ளது. பயணத்தின் 14வது நாளாக இன்று கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகின் 2-வது பெரிய பணக்காரர் (கவுதம் அம்பானி) இந்தியாவை சேர்ந்தவர். நாட்டில் வேறு போட்டியாளர்கள் யாரும் உள்ளே நுழையாத வகையில் எந்த தொழிலலையும் அவரால் கட்டுப்படுத்த முடியும். அவரால் எந்த விமான நிலையம், துறைமுகத்தை வாங்கமுடியும். வேளாண்மை, மின்துறை, சூரியமின்சார தொழிலிலும் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்த தொழில்களை வளர்க்க அவருக்கு பணம் கொடுத்தது யார்? அது பொதுத்துறை வங்கிகளில் இருந்து வந்தது... அது உங்கள் பணம்.
பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டவும், விவசாயிகளுக்கு கடன்கள் கொடுக்கவும், சிறு தொழில் உரிமையாளர்களுக்கு உதவவும் இந்த பணம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச்செலுத்தவில்லை என்றால் நீங்கள் குற்றவாளியாக அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச்செலுத்தவில்லை என்றால் அவர்கள் குற்றவாளிகளாக அழைக்கப்படுவதில்லை மாறாக செயலற்ற சொத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்' என்றார்.