முழுஅடைப்பின் போது திறந்திருந்த 3 ஓட்டல்கள் சூறையாடல்


முழுஅடைப்பின் போது திறந்திருந்த 3 ஓட்டல்கள் சூறையாடல்
x

பெங்களூருவில் முழு அடைப்பின் போது திறந்திருந்த 3 ஓட்டல்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பையொட்டி நகரில் பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. சில பகுதிகளில் ஓட்டல்கள் எப்போதும் போல் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. அதுபோல், ஜெயநகரில் ஒரு ஓட்டல் நேற்று காலையில் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது ஓட்டலுக்குள் புகுந்த 3 மர்மநபர்கள் திடீரென்று அங்கிருந்த நாற்காலி உள்ளிட்டவற்றை கீழே தூக்கி போட்டு உடைத்தார்கள். ஓட்டலின் கண்ணாடிகளையும் நாற்காலியால் தாக்கி உடைத்தார்கள். அங்கிருந்த பொருட்களை உடைத்து மர்மநபர்கள் சூறையாடினார்கள். இதனால் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். ஓட்டலில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதுபோல், ஜெயநகர் 4-வது பிளாக்கில் திறக்கப்பட்டு இருந்த மற்றொரு ஓட்டலில் புகுந்தும் மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். அத்துடன் ஓட்டல் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். இதில், அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த கடைக்கு அருகில் உள்ள மற்றொரு ஓட்டல் மீதும் மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர். முழு அடைப்பு நடைபெறுமா? ஓட்டல்களை கண்டிப்பாக மூட வேண்டுமா? என்பது தெரியாமல் ஓட்டல்களை திறந்ததாகவும், ஆனால் மர்மநபர்கள் ஓட்டல்களை எதற்காக திறந்து வைத்துள்ளீர்கள் என்று கூறி பொருட்களை உடைத்து சூறையாடி உள்ளனர் என்று ஓட்டல் உரிமையாளர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓட்டல்களில் தாக்குதல் நடத்தியதாக 2 பேரை ஜெயநகர் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட மேலும் சிலரை தேடிவருகிறார்கள். ஓட்டலில் புகுந்து மர்மநபர்கள் நாற்காலிகளை தூக்கி வீசுவது மற்றும் வாடிக்கையாளர்கள் பதற்றதுடன் வெளியே ஓடிவரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story