பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கர்,
சத்தீஸ்காரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர் மீது தாக்குதல்களும் நடத்தப்படுவதுண்டு. இதில், பொதுமக்களும் சில சமயங்களில் இலக்காவதுண்டு.
இந்த நிலையில், சத்தீஸ்காரின் கான்கேர் மாவட்டத்தில் போம்ரா-ஹுர்தராய் கிராமங்களுக்கு இடையே உள்ள மலையில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.