சத்தீஷ்காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்


சத்தீஷ்காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 29 Dec 2023 11:26 AM IST (Updated: 29 Dec 2023 11:33 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 3 பேரும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பிஎஸ்யூபி காலனியில் வசித்து வந்தவர் லகன் லால் (வயது 48). இவர் இரும்பு வியாபாரி ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராணு சென் (வயது 42). இவர்களது மகள் பாயல் (வயது 14).

இந்நிலையில், நேற்று லகன் லால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் கதவை யாரும் திறக்காத நிலையில் திக்ரபாரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லகன் லால் அவரது மனைவி மற்றும் மகள் மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. எனினும், சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story