அசாமில் பயங்கரம்: பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்
அசாமில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கவுகாத்தி,
அசாமின் தின்சுகியா மாவட்டம் தமுல்பாரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது உல்பா பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்கள் எதற்காக பொதுமக்களில் 3 பேரை குறிவைத்து தாக்கினார்கள் என்று தெரியவில்லை.
எல்லை பகுதியில் அட்டகாசம்
இந்த பகுதி அருணாசலபிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள எல்லை பகுதியில் வனங்களில் பதுங்கிய நிலையில் உல்பா பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்கள் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிவிட்டு எல்லை கடந்து மிசோரம், அருணாசலபிரதேசம் போன்ற இடங்களுக்கு தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் அதிக அளவில் அதிரடி படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பழிக்குப்பழியா...
சமீபத்திய தேடுதல் வேட்டையின்போது, உல்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உதய் அசோம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.