ஏரியில் மூழ்கி மாணவர்கள் 3 பேர் பலி


ஏரியில் மூழ்கி மாணவர்கள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:45 PM GMT)

பெங்களூரு புறநகரில் ஏரியில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:-

மாணவர்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் தேவனஹள்ளி டவுன் கெரேகோடி-சிட்லகட்டா சாலை பகுதியில் வசித்து வந்தவன் கார்த்திக்(வயது 15). இவனது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த குருபிரசாத்(16) மற்றும் தனுஷ்(11). இவர்களில் தனுஷ் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், கார்த்திக் மற்றும் குருபிரசாத் ஆகியோர் தேவனஹள்ளி டவுனில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டும் படித்து வந்தார்கள். நேற்று முன்தினம் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய இவர்கள் 3 பேரும், பின்னர் சைக்கிள்களில் வெளியே புறப்பட்டனர். அவர்கள் தேவனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட சிக்கனஹள்ளி ஏரிக்கு சென்றனர். அங்கு 3 பேரும் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏரியில் குளித்தனர்.

இதில் எதிர்பாராத விதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் ஏரியில் மூழ்கினர்.

3 பேரும் பிணமாக மீட்பு

இதையடுத்து இச்சம்பவம் குறித்து தேவனஹள்ளி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஏரியில் கார்த்திக் உள்ளிட்ட 3

பேரையும் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால்நேற்று முன்தினம் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலையில் ஏரியில் அவர்கள் 3 பேரையும் தேடும் பணி நடந்தது. இதில் கார்த்திக், குருபிரசாத், தனுஷ் ஆகிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களைப் பார்த்து அவர்களுடைய பெற்றோர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

சோகம்

பின்னர் மாணவர்கள் 3 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தொட்டபள்ளாப்புரா துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் தனித்தனியாக விஜயபுரா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குளிக்க சென்ற மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story